விபத்துக்குள்ளான பேருந்துகள்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து சென்றது. அதேசமயத்தில் திருப்பூரிலிருந்து காரைக்குடிக்கு மற்றொரு அரசுப் பேருந்து வந்தது.
இரு பேருந்துகளும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி சமத்துவபுரம் பகுதியில் இன்று மாலை 4.20 மணிக்கு சென்றபோது நேருக்கு, நேர் மோதின.
இதில் சம்பவ இடத்திலேயே 9 பெண்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக வந்தோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி பார்வையிட்டார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும் இந்த கோர விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டன.
முதல்கட்ட விசாரணையில், திண்டுக்கல் சென்ற அரசுப் பேருந்து அதிவேகமாக சென்றதால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.