தமிழகம்

பரமத்தி வேலூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பின்போது விபத்து: கணவன், மனைவி உட்பட 3 பேர் உயிரிழப்பு

கி.பார்த்திபன்

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பின்போது வெடி வெடித்து சிதறியதில் கணவன், மனைவி மற்றும் பெண் தொழிலாளர் ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (53). இவர் கோயில் திருவிழா உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக உரிமம் பெற்றுள்ளார்.

வீட்டு மாடியிலேயே நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளார். இங்கு தயாரிக்கப்படும் நாட்டு வெடி பாண்டமங்கலம் அருகே கபிலர்மலையில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம். நேற்று மாலை வீட்டு மாடியில் நாட்டு வெடி தயாரிப்பு பணியில் ராஜசேகரன், அவரது மனைவி சத்தியா (45) உள்பட மேலும் இரு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாடியில் வைத்திருந்த நாட்டு வெடி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்தியா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தவிர, நாட்டு வெடி வெடித்துச் சிதறியதில் வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கி ராஜசேகரன், பாண்டமங்கலத்தைச் சேர்ந்த மலர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். வீட்டின் கீழ் இருந்த ராஜசேகரனின் 2வது மகன் சஞ்சய் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் அருகே இருந்த நான்கு வீடுகளின் ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து சிதறியது. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த நாமக்கல், திருச்செங்கோடு, கரூர் மாவட்ட தீயணைப்புத்துறையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணி இரவு 8 மணியைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பரமத்தி வேலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு வெடி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த ராஜசேகரன் மூத்த மகன் ரோகித்திற்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகனூரில் நடந்த சம்பவம்

மோகனூர் மேட்டுத்தெருவில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டு வெடி தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் நாட்டு வெடி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த அதன் உரிமையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

SCROLL FOR NEXT