கும்பகோணம்: பள்ளி மாணவன் உயிரிழப்பு எதிரொலியாக பட்டீஸ்வரம் பள்ளி தலைமையாசிரியர் தனது பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் கவியரசன்(17) கடந்த 4-ம் தேதி தலையில் பலத்த காயமடைந்து, 7-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீஸார் விசாரணை நடத்தி, பிளஸ் 1 மாணவர்கள் 15 பேரை டிச.5-ம் தேதி கைது செய்து தஞ்சாவூர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, விடுமுறை முடிந்து கடந்த டிச.8-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டு, டிச.12-ம் தேதி வரை கடந்த 5 நாட்கள், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி, பள்ளிக்கு நேரடியாக வந்து காலை 9.30 மணி முதல் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், 11-ம் மற்றும் 12-ம் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம், வகுப்புகள் சரியாக நடக்கிறதா, சந்தேகம் உள்ளதா, வேறு ஏதேனும் மன அழுத்தம் உள்ளதா, மற்ற மாணவர்களால் தொல்லை உள்ளதா என கேட்டறிந்தார்.
இந்தப்பள்ளி தலைமையாசிரியராக விருதுநகர் மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, கடந்த ஜூலை, ஓய்வு பெற்ற நிலையில், வரும் மார்ச் வரை கால நீட்டிப்பு செய்து பணியாற்றி வந்தார். இந்தநிலையில், பள்ளி மாணவன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக டிச.12-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி கூறியது: பள்ளி மாணவன் உயிரிழப்பு காரணமாக, பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தியதின் படி, பள்ளி தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி விடுவிக்கப்பட்டார் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியது: தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி காலநீட்டிப்பு செய்து பணியாற்றி வந்த நிலையில், அவர் சொந்த விருப்பத்தின் காரணமாக விடுவித்துக்கொண்டார் என தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி கூறியது: பள்ளி மாணவன் உயிரிழந்தது சம்பவம் போல் வேறு எங்கும் யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது. எனது மனம் அமைதிக்காக, நானாகவே சொந்த விருப்பத்தின் காரணமாக விலகி கொண்டேன் என்றார்.