தமிழகம்

’ஆழியாறில் கேரளாவுக்கு தண்ணீர் தர மறுத்தால் சிறுவாணி நீருக்கு ஆபத்து’ - மாவட்ட ஆட்சியரிடம் பிஏபி புகார்

இரா.கார்த்திகேயன்

கோவை: ஆழியாறில் கேரளாவுக்கு தண்ணீர் தர மறுத்தால் கோவை மாநகர சிறுவாணி நீருக்கு ஆபத்து ஏற்படும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் பிஏபி தலைவர் புகார் அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவரை இன்று (மார்ச் 5) சந்தித்த பிஏபி திருமூர்த்தி நீர் தேக்கத் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் கூறியது: “பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் (பிஏபி) நீர் தொகுப்பில் ஆழியாறில் 44 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. 22 ஆயிரம் ஏக்கர் என பிரித்து 2 பாகங்களாக விநியோகிக்கப்படுகிறது.

அதேபோல் பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. திருமூர்த்தி அணையில் 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் 2 பாகங்களாக பிரித்து வழங்கப்படுகிறது.

          

காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியாறு அணைகளில் இருந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முறையே 400 மில்லியன் கன அடி மற்றும் 600 மில்லியன் கன அடி என, 1000 மில்லியன் கன அடி (1 டிஎம்சி) தண்ணீரை ஆழியாறு அணைக்கு இறக்கி கொள்ள வேண்டும் என காடம்பாறை மின்வாரியமும், பொள்ளாச்சி நீர்வளத்துறைக்கும் விவசாயிகள் கோரிக்கை வைத்து, அதற்கு ஒத்திசைவும் அளிக்கப்பட்டது.

தற்போது மேற்கண்ட அணைகளில் இருந்து ஆழியாறு அணைக்கு தண்ணீர் இறக்குவதற்கு மின்வாரியத் துறை மறுக்கிறார்கள். கேரள மாநிலம், ஆழியாறு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆழியாறில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் மறுக்கும்போது, அவர்கள் கோவை மாநகர மக்கள் பயன்படுத்தும் சிறுவாணி தண்ணீரை கை வைக்க பார்க்கிறார்கள். ஆழியாறில் தண்ணீர் கொடுக்கவில்லையென்றால், சிறுவாணியில் தண்ணீரை தடுக்க பார்க்கிறார்கள்.

அதேபோல் பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு செல்லும் தண்ணீரை, ஆழியாறு அணையில் இறக்கவும் முயற்சிகள் நடைபெறுகிறது. திருமூர்த்தி அணையின் முதல் மண்டல பாசனம் முதல் சுற்று நடைபெறும் சூழ்நிலையில், திருமூர்த்தி அணைக்கு வரும் தண்ணீரை ஆழியாறு அணைக்கு இறக்கினால் 10 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தேர்தல் நேரத்தில் விவசாயிகள் போராட்டத்தை கையிலெடுக்கும் சூழ்நிலையை தவிர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளும் பாதிக்கப்படும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துக்கான அப்பர் ஆழியாறு மற்றும் காடம்பாறை அணைகளில் இருந்து ஆழியாறு அணைக்கு கொடுப்பதாக உறுதி அளித்த 1 டிஎம்சி தண்ணீரை, தாம்தமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை தாமதம் செய்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக பேசி, பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், ”இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT