அப்துல் கலாம் |கோப்புப் படம் 

 
தமிழகம்

அப்துல் கலாம் பிறந்தநாள்: தமிழக முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் புகழ் வணக்கம்

தமிழினி

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு ஊக்கமளித்து, அவர்களின் லட்சியப் பயணத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஏவுகணை நாயகன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளில், அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.

இஸ்ரோ விஞ்ஞானி, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், குடியரசுத் தலைவர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தபோதிலும், 'ஆசிரியர்' என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் மகுடமாகக் கருதி, இறுதி மூச்சுவரை மாணவர்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாமனிதரின் எளிமை, நேர்மை, அறிவியல் சிந்தனை என்றும் போற்றுதலுக்குரியவை.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உயரிய சிந்தனைகளையும், தொலைநோக்குப் பார்வையையும் நம் மனதில் நிறுத்தி, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: “மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் அப்துல் கலாம். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.

நமது திராவிட மாடல் அரசில், அப்துல் கலாமுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம். அப்துல் கலாம் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி: “இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமின்றி, இனிவரும் தலைமுறையினராலும் போற்றப்படக்கூடிய நாயகனான இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை நான் வணங்கி மகிழ்கிறேன்.

அவர் கனவு கண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக , அவர் வகுத்துத் திட்டப்படி கடுமையாக உழைக்க அவரது பிறந்த நாளில் ஒட்டுமொத்த இந்திய மக்களும் உறுதியேற்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: “கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்கக் கடுமையாக உழையுங்கள் என்ற உயரிய சிந்தனையை இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தவரும், தனது அறிவாற்றல், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியில் மிகபெரிய பங்காற்றியவரும், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று.

அறிவு, ஒழுக்கம், உழைப்பு, நேர்மை ஆகியவையே வெற்றிக்கான படிகள் என்பதைத் தனது வாழ்க்கையின் மூலம் உணர்த்தியதோடு, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுபோல் இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது புகழ் வணக்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT