தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

“பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு” - தினகரன்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘சென்னை பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான்.

ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.

நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கெனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும்.

மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.

இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.

மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும்.

ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதல்வர் விஜய்யின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.

எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT