சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: ஜெர்சி கலப்பின கன்றுகளில் பால் உற்பத்தி திறன் மேம்படுத்த விஞ்ஞானப் பூர்வமான, கன்று வளர்ப்பு மற்றும் இனவிருத்தி மேலாண்மை பணிகள் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்.
50 ஆயிரம் கறவை மாடுகளில் கன்று ஈனும் கால இடைவெளியைக் குறைக்கும் வகையில் இனவிருத்தி மேலாண்மை பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கிராமப்புறங்களில் கொள்முதல் செய்யப்படும் ஆரம்ப நிலை பாலின் தரத்தினை பாதுகாக்க 60 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மற்றும் 40 குளிர்விப்பு நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.25.45 கோடியில் நிறுவப்படும். 15 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு மற்றும் தூய பால் உற்பத்தி குறித்து பயிற்சி மற்றும் 700 ஒன்றிய பணியாளர்கள் மற்றும் 1000 சங்க பணியாளர்களுக்கு ரூ.1.76 கோடியில் தர மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.
100 தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை மேம்படுத்தும் விதமாக ரூ.8.81 கோடியில் துணை உபகரணங்கள் நிறுவப்படும். ஈரோடு ஒன்றியத்தில் உள்ள தர ஆய்வகத்துக்கு ரூ.31.5 லட்சத்திலும், திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தர ஆய்வகத்துக்கு ரூ.11.25 லட்சத்திலும் கூடுதல் உபகரணங்கள் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அம்பத்தூர் பால்பண்ணை ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும். பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிறப்பாக செயல்படும் முதல் மூன்று பால் உற்பத்தியாளர்கள், மகளிர் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்கச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு “ஆவின் வெற்றி விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுவர்.
ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.5.18 கோடியில் 112 சிறந்த மரபியல் திறனுள்ள பொலிகாளைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஜெர்சி கலப்பின பொலிகாளை பண்ணைகளுக்கு வழங்கப்படும். தரமான பசுந்தீவன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 25 மெட்ரிக் டன் பசுந்தீவன புல் விதைகள் 5 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.
கடந்த காலங்களில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக ஆவின் நிர்வாகத்துக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் முதல்வரின் ஒப்புதலுடன் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
மேலும், பால்வளத்துறையில் நடந்த முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டு அதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில்நிலையங்களில் ஆவின் பார்லர்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.