ஆதவ் அர்ஜுனா
சென்னை: நிலக்கரி ஊழல், மின்மாற்றிகள் கொள்முதலில் நடந்த ஊழலே தற்போதைய மின்தடைக்கு காரணம். நிலக்கரி கொள்முதலில் நடந்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: நதிகள் அனைத்தும் கடலில் வந்து சேருவதுபோல, தமிழகத்தின் பல்வேறு அரசியல் நீரோட்டங்களும் தற்போது ‘தவெக’ எனும் கடலை நோக்கி, எங்களது தலைவரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. 70 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க கட்சி என்று கூறிக்கொள்கிறது திமுக. ஆனால், சட்டப்பேரவைத்தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் பேராதரவுடன் தவெக வெற்றி பெறப்போவதுகூட அவர்களுக்கு தெரியவில்லை.
தமிழக மின்துறையில் பெரும் ஊழல் நடந்துள்ளது. இந்த துறையில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த திமுக அரசு புதிய பணியாளர்களை நியமிக்கவில்லை. ஒவ்வொரு தெருவிலும் உள்ள மின்மாற்றிகளும் (டிரான்ஸ்ஃபார்மர்) தரமற்றவையாக உள்ளன. நிலக்கரி கொள்முதலில் டாலர்களில் ஊழல் நடந்துள்ளது. மின்துறையை அழித்து விட்டு, தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி, துறையைக் கடனாளி ஆக்கியுள்ளனர்.
ஊழலில் ஊறிப்போன செந்தில் பாலாஜியிடம் மின்துறை, மதுவிலக்கு துறையைக் கொடுத்தனர். அவர் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகப் பெற்று மாதம் ரூ.1,500 கோடி வசூலித்துள்ளார். நிலக்கரி ஊழல், மின்மாற்றிகள் கொள்முதலில் நடந்த ஊழலே தற்போதைய மின்தடைக்கு காரணம். நிலக்கரி கொள்முதலில் நடந்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரால் வெளியிடப்படும்.
அதிமுகவில் இருந்து வந்தவர்களுடன் இணைந்து இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதுதான் எங்களது அடுத்த குறிக்கோள். தவெக அமைச்சர்கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் உழைக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் எந்த தலைவராலும் செய்ய முடியாத ஊழல் ஒழிப்பை நாங்கள் சாத்தியப்படுத்தி உள்ளோம். அதிமுகவினரைவிட திமுகவினரே அதிக மனச்சோர்வுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.