சென்னை: தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளியில் தலைகாட்டவே பெண்கள் பயந்து நடுங்கும் சூழல் உருவாகியுள்ளது என தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை நந்தனத்தில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன. பாதிக்கப்பட்ட பெண் முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இந்த அதிர்ச்சியில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
பெண்களை வெறும் சதைக் குவியலாக கொச்சைப்படுத்தி பேசுபவர்களை நட்சத்திரப் பேச்சாளர்களாகக் கொண்டாடும் திமுக எனும் கட்சியிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதற்கான மற்றுமொரு சான்று இது.
தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளியில் தலைகாட்டவே பெண்கள் பயந்து நடுங்கும் ஒரு கேவலமான ஆட்சியை நடத்திக் கொண்டு, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பெயரில் விளம்பர விழா எடுக்க முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் என அரசு இயந்திரத்தின் அனைத்து அங்கங்களையும் கயவர்கள் அரித்தெடுத்துக் கொண்டிருப்பதை அமைதியாக வேடிக்கை பார்ப்பதைத் தவிர திமுக அரசு வேறு எதையும் சாதித்துவிடவில்லை.
தங்கள் அலட்சியப்போக்கால் ஒட்டுமொத்த தமிழகப் பெண்களின் பாதுகாப்பையே கயவர்களிடம் அடகுவைத்த திமுகவின் அவல ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றும் வரை மக்கள் ஓயமாட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.