சென்னை: “முதல் முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது” என்று தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், ‘தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று என்பதை மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப் பெற்றது மன நிறைவைத் தருகிறது.
மேலும், முதல் முறையாக சட்டசபையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, மக்களாட்சியின் மாண்பை நிலை நாட்டும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
ஜனநாயகத்தில் ஆளப்படும் ஆட்சியானது, ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் நிலைநாட்டி, மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை பூர்த்தி செய்வதையே ஓர் நிலையான, முன்னுதாரணமான அரசானது தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாததை சுட்டிக்காட்டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேரவையில் வாசிக்காமல் வெளியேறினார். அதன்பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே பேரவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்தார்.
அதற்குப் பிறகு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில், அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிந்து, தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆளுநர் உரை முடிந்தபின்னரும் தேசிய கீதம் மீண்டும் இசைக்கப்பட்டது.
இதைச் சுட்டிக்காட்டியே மாநில அரசுடன் இணக்கமான சூழல் உருவாகியுள்ளதாக ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.