சென்னை: மெட்ரோ ரயில்கள், ரயில் நிலைய வளாகங்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தமாகப் பேசுவது, காதில் ஹெட்ஃபோன் பொருத்தாமல் செல்போனில் பாட்டு கேட்பது போன்ற பயண ஒழுங்குமுறை விதிமீறல்களுக்கான அபராதம் ரூ.500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும், அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்து பயணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.
மெட்ரோ ரயில் (இயக்கம், பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன்கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ, அவர்களது வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
குறிப்பாக, மெட்ரோ ரயில்கள் மற்றும் வளாகங்களில் செல்போன் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்திக் கொள்ளாமல் இசை, வீடியோக்கள் பார்ப்பது, செல்போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்கள் மூலம் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் செல்போன்களைப் பயன்படுத்துவதும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கான அபராத தொகை ரூ.500-ல் இருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் உரத்த குரலில் பேசுவது, ஒலிபெருக்கி பயன்படுத்துவது (ஸ்பீக்கர் மோடு) ஆகியவற்றை தவிர்த்து, காதில் பொருத்திக் கொள்ளும் ஹெட்போன்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.