வேலூர்: வேலூர் மாநகராட்சியில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 15 நகர்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றன.
வேலூர் மாநகராட்சியில் சேண்பாக்கம் மற்றும் முத்துமண்டபம் பகுதியில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்புற நலவாழ்வு மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டிட பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இந்த மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் நகர்புற ஏழை மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது ‘‘வேலூர் மாநகராட்சியில் 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப நிலைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாநகர ஏழை மக்களின் சுகாதார பிரச்சினைகளுக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரிதளவில் உதவியாக இருந்து வருகின்றன.
மாநகர மக்களின் சுகாதார தேவைகளை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக தொடங்கப்பட உள்ள நகர்புற நல வாழ்வு மையங்கள் இருக்கும். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த மையங்கள் அமைய உள்ளன. வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 20 நகர்புற நல வாழ்வு மையங்கள் கட்டப்படுகிறது. இதில், 15 நகர்புற நலவாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. மீதியுள்ள கட்டிடங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன’’ என்றனர்.
நகர்புற நல வாழ்வு மைய கட்டிடங்கள் திறக்கப்படாத நிலையில் அதை இரவு நேரத்தில் சிலர் மதுபானம் அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கட்டிடங்களை கட்டி முடித்தது மட்டுமில்லாமல் அதை திறப்பு விழா வரை பாதுகாப்பாக பராமரிப்பதையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் நகர்நல அலுவலர் கணேசனிடம் கேட்டதற்கு, ‘‘தமிழ்நாட்டில் முதற் கட்டமாக 708 நகர்புற நல வாழ்வு மையங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில், வேலூர் மாநகராட்சியில் 20 பணிகள் எடுக்கப்பட்டு 15 பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
ஒவ்வொரு நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு உதவியாளர் என நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 500 நகர்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். அதன்படி, வேலூர் மாநகராட்சியில் 15 நகர்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்’’ என்றார்.
வேலூர் மாநகராட்சியில் 15 மையங்கள், குடியாத்தம் நகராட்சியில் 2, பேரணாம்பட்டு நகராட்சியில் 1 என மொத்தம் 18 நகர்புற நல வாழ்வு மையங்கள் திறப்பு விழாவுக்காக தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.