ஜி.கே.வாசன் | கோப்புப் படம் 
தமிழகம்

தொடர்ந்து 3-வது முறையும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

இ.ஜெகநாதன்

திருப்புவனம்: தொடர்ந்து மூன்றாவது முறையும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தமாகா மாநில தொண்டரணித் தலைவர் அயோத்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''மேகேதாட்டுவில் அணை கட்டப் போவதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்தது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், மேகேதாட்டு அணையை பற்றி பேசியிருப்பது வருத்தமளிக்கிறது. கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழக விவசாயிகளை வஞ்சிக்க துடிக்கின்றனர். இதில் தமிழக அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் இனி இதுபோன்று பேசக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைமை கண்டிக்க வேண்டும்.

வருமான வரி விஷயத்தில் தவறு செய்திருந்தால், சந்தேகம் வந்தால் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது வழக்கம். சட்டம் தன் கடமையை செய்யும்போது யாரும் எதிர்க்கக் கூடாது. சோதனை முடிந்ததும் உண்மை வெளியே வரும்.

நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. அதை ஜீரணிக்க முடியாதவர்கள், வரலாறு பற்றி திரித்து தவறான கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதனை தமிழக மக்கள் ஏற்கமாட்டர்'' என்று அவர் கூறினார்.

3வது முறையும் பாஜக: தொடர்ந்து அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியது: ''முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் வெறும் விளம்பரமாக இருக்கக் கூடாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொழில்கள் தொடங்க வேண்டும். பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்கி, வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

மல்யுத்த வீரர்கள் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும். 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் முடிவு சரியானதுதான். இது தவறான வழியில் பணத்தை சேர்த்தவர்களை மட்டுமே பாதிக்கும். திமுக அரசு முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால், வாக்களித்த மக்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.

பாஜக ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாகவும், வளர்ச்சி அடையும் நாடாக மாறியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும். புதிய நாடாளுமன்றம் தொடக்க விழாவை புறக்கணித்தவர்களை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டர்” என்று அவர் கூறினார். மாநில தொண்டரணித் தலைவர் அயோத்தி உடனிருந்தார்.

SCROLL FOR NEXT