கரூர்: ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சையில் தங்கத் தந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாநில அளவில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது. ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை (வாசக்டமி) எளிதானது என்றாலும், தமிழகத்தில் ஆண்கள் பெருமளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வருவதில்லை.
ஆனாலும், ஆண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்படி, 2022-23-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 7,000 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1,304 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்து, 18.6 சதவீதம் மட்டுமே இலக்கு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு நவம்பரில் தங்கத் தந்தை திட்டத்தை ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிமுகம் செய்தார். இத்திட்டத்தின் கீழ் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ரூ.1,100-க்குப் பதிலாக ரூ.5,000 அல்லது அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதேனும் ஒன்று முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுவதுடன், தங்கத் தந்தை விருதும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கங்களில் இருந்து வந்த குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை, 2021-22-ம் ஆண்டில் 5 மாதங்களில் மட்டும் 84 ஆக அதிகரித்தது. தொடர்ந்து, 2022-23-ம் ஆண்டில் 110 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 91 பேருக்கு(82.7 சதவீதம்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் சதவீத அடிப்படையில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியது: 2018-19-ம் ஆண்டில் 7 பேர், 2019-20-ம் ஆண்டில் 5 பேர், 2020-21-ம் ஆண்டில் 8 பேர் என மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
2021-ம் ஆண்டு நவம்பரில் தங்கத் தந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, 2021- 22-ம் ஆண்டில் 5 மாதங்களில் 84 பேர், 2022- 23-ம் ஆண்டில் 91 பேர் என ஒன்றரை ஆண்டுகளில் 175 ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 2022-23-ல் மாநில அளவில் கரூர் மாவட்டம் 2-ம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
‘தங்கத் தந்தை’ விருது திட்டத்தில் வழங்கப்படும்: நலத்திட்ட உதவிகள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் அல்லது இலவச வீட்டுமனை, வீட்டில் உள்ள முதியவர் ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை, விலையில்லா கறவை மாடு அல்லது வெள்ளாடு, இலவச கால்நடை கொட்டகை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையதாரர் இல்லாமல் வங்கிக் கடன் உதவி, வேளாண்மைத் துறையின் மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து தருதல், விவசாயிகளுக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.445 வீதம் 50 சதவீத மானியத்துடன் 1,000 சதுர மீட்டர் அளவில் பசுமைக் குடில் திட்டத்தின் மூலம் பாலிதீன் குடில் அமைத்து தருதல், மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல் போன்ற அரசுத் திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
- க.ராதாகிருஷ்ணன்