சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில பாஜக விளையாட்டு பிரிவின் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை மாநில பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
57 வயதான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், இந்திய கிரிக்கெட் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி உள்ளார். வலது கை லெக் ஸ்பின்னரான இவர் மொத்தம் 41 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக 1987-ல் விளையாடினார். கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக இயங்கி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் அவர் இணைந்தார். இந்தச் சூழலில் தமிழ்நாடு மாநில பாஜக விளையாட்டு பிரிவின் கவுரவ தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மாநில பாஜக விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.