சென்னை: அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து நேற்று 2-வது நாளாக ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் முகவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருள்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபடுகிறது. சென்னையில் ஆவின் நிறுவனம் வாயிலாக 14.20 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில்,அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும் 4.20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து, வாகனங்கள் மூலமாக ஏற்றி, மாதாந்திர அட்டைதாரர்கள், முகவர்கள் உள்பட பலருக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த பால் பண்ணையில் இருந்துகடந்த மார்ச், ஏப்ரலில் குறிப்பிட்டநாட்கள் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால்,பொதுமக்களுக்கு ஆவின் பால்கிடைக்காமல் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து, 2 அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், பால் விநியோகம் சீராக இருந்தது.
இதற்கிடையில், அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சில இடங்களுக்கு பால் விநியோகம் செய்வதில் நேற்று முன்தினம் தாமதம் ஏற்பட்டது. பால் விநியோகம் பாதிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், பால் வரத்து குறைவால், அம்பத்தூர் பால்பண்ணையில் இருந்து 2-வது நாளாக நேற்றும் ஆவின் பால்விநியோகம் தாமதம் ஏற்பட்டது. அம்பத்தூர் ஆவின் பால்பண்ணைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால்வரத்து குறைந்ததால், பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அதிகாலை 5 மணிக்கு பால் விநியோகம் செய்ய வேண்டிய நிலையில், காலை6.30 மணி வரை 10-க்கும் மேற்பட்டபால் விநியோக வாகனங்கள் பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் இருந்தன.
இதன் காரணமாக, முகப்பேர், மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஏற்பட்டது.
இதனால் பால் முகவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். காலதாமதம் இன்றி பால்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.