சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் மாறுதல் வர வேண்டும் என்ற நோக்குடன், பாரிவேந்தருடன் இணைந்து நிற்கிறேன். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும்.
தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத பார்கள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அதன்மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு வராமல், எங்கே போகிறது என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. பேசும்போது, “தமிழகத்தில் தற்போது நல்ல சாலைகள், பள்ளிகள் இருக்கிறதோ, இல்லையோ, ஆனால் நிறைய மதுக் கடைகள் இருக்கின்றன. மதுவால் மக்களின் உயிரைப் பறிக்கிறது தமிழக அரசு.
எனவே, மதுபானங்களால் மக்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, பூரண மதுவிலக்கு அமல்படுத்தி, தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்” என்றார். இந்தப் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.