கடந்த ஆண்டு ஆடி அமாவாசையின்போது சதுரகிரி மலைப் பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல். (கோப்பு படம்) 
தமிழகம்

நெரிசலில் சிக்கி தவிக்கும் பக்தர்கள்: ஆண்டு முழுவதும் வழிபாடு நடத்த சதுரகிரியில் அனுமதி கிடைக்குமா?

அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வனத்துறை அனுமதி வழங்குவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆண்டு முழுவதும் வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்ப வனப் பகுதியில் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி அமைந்துள்ளது. இங்குள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் தரிசனம் செய்ய தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் தரிசனம் செயய் வருகின்றனர்.

சதுரகிரியில் உள்ள கோயிலை சென்றடைய தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வழுக்குப் பாறை, மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப் பாறை, கோணத்தலவாசல், காராம்பசு தடம், சின்ன பசுக்கிடை, நாவல் ஊற்று, பச்சரிசி பாறை, யானை பாறை, பெரிய பசுக்கிடை உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான செங்குத்தான மலைப் பாதையில் 12 கி.மீ. மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

முன்பு ஆண்டுதோறும் மலையேறிச் சென்று கோயிலில் வழிபட அனுமதியளிக்கப்பட்டது. அமாவாசை, பவுர்ணி ஆகிய நாட்களில் மலைக் கோயிலில் இரவில் தங்கி பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர்.

மலையேற கட்டுப்பாடுகள்: மழைக்காலங்களில் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, வனத் துறை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பக்தர்கள் ஆறுகளை கடந்து கோயிலுக்குச் சென்று வந்தனர். இந்நிலையில், 2015-ம் ஆண்டு சதுரகிரி மலையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதித்த வனத் துறை, கோயிலுக்குச் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பவுர்ணமியையொட்டி 4 நாட்கள், அமாவாசையையொட்டி 4 நாட்கள் என மாதந்தோறும் 8 நாட்கள் மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் கூட பக்தர்கள் இரவில் தங்க அனுமதி வழங்கப்படுவதில்லை.

அன்னதானம் வழங்க தடை: முன்பு சதுரகிரி மலையேறும் பக்தர்களுக்கு தனியார் மடங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

மேலும் சாதாரண நாட்களில் உணவு, குடிநீர், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அன்னதானம் வழங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்குவதற்கு வனத் துறை மற்றும் அறநிலையத் துறை தடை விதித்தது.

ஆனால் தற்போது புற்றீசல் போல் வழி நெடுகிலும் திறந்தவெளி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனால் வனப் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்குகிறது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? - தற்போது பிரதோஷ நாட்களில் 2,000 பக்தர்களும், அமாவாசை பவுர்ணமி ஆகிய நாட்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். மிகவும் குறுகலான மலைப் பாதையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் மலையேறுவதால் கடும் சிரமம் ஏற்படுகிறது.

கட்டுப்பாடுகளை தளர்த்தி ஆண்டு முழுவதும் மலையேறுவதற்கு அனுமதி வழங்கினால், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது தவிர்க்கப்பட்டு, நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக திருகோயில்கள், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் சரவண கார்த்திக் கூறியதாவது: வட மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற சிவ தலங்களான கேதார்நாத், அமர்நாத் போன்ற கோயில்களுக்குச் செல்ல இயலாதவர்கள் தமிழகத்தில் உள்ள வெள்ளியங்கிரி, சதுரகிரி கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வனப்பகுதியில் உள்ள கோயில்களில் கட்டுப்பாடின்றி பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், சதுரகரி, வெள்ளியங்கிரி, மங்கலநாயகி கண்ணகி கோயில் உள்ளிட்ட மலைப் பகுதியில் உள்ள கோயில்களுக்குச் செல்ல வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதை தளர்த்த வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT