திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகள் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள். 
தமிழகம்

தி.மலை | மத்திய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் பரிதவிப்பு: நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு வேண்டுகோள்

இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இப்பேருந்துகளில் பயணிக்க உள்ளூர், வெளியூர் மற்றும் கிராமங்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் கிடைக்காமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர்.

சேலம் மற்றும் விழுப்புரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டப்பட்ட இரண்டு தண்ணீர் தொட்டிகள் காட்சி பொருளாக உள்ளன. மேலும் கடைகளில் பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பயணிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

கோடை காலத்திலும் பேருந்து நிலையத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யாமல் பயணிகளை வறட்சியடைய செய்துள்ளது நகராட்சி நிர்வாகம். இவர்களது செயல், கடைகளில் குடிநீர் பாட்டில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

மேலும், கழிப்பறைகளும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. இலவச கழிப்பறையின் நிலையை, அவ்வழியாக கடந்து செல்லும்போது, எளிதாக தெரிந்துகொள்ளலாம். இலவச கழிப்பறையில் வீசும் துர்நாற்றத்தை சமாளித்து கடந்து செல்வது என்பது சவாலானது.

காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டி. படங்கள்: இரா.தினேஷ்குமார்.

மூக்கை மூடிக்கொண்டு, வேகமாக பயணிகள் ஓட்டமெடுக்கின்றனர். தண்ணீர் வருவதில்லை. கழிப்பறையை முறையாக சுத்தம் செய்வது கிடையாது. இலவச கழிப்பறையை பயன்படுத்தும் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பேருந்து நிலையத்தில் உள்ள பொது இடத்தை பயணிகள் பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், வெயில் மற்றும் மழைக் காலங்களில் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை முழுமையாக நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மேலும் கடைக்காரர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மேற்கூரை பகுதியில் நிற்க வழியின்றி பயணிகள் தவிக்கின்றனர். பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இது குறித்து பயணிகள் கூறும்போது, “சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க முன்வராததால் பயணிகளின் அவதி என்பது தொடர்கிறது. மேலும், பயணிகளுக்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகளை அகற்றவும் அல்லது ஒழுங்குப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் முன்வரவில்லை.

நடைபாதை வியாபாரிகளால் ஆதாயம் அடைவதால் கண்டு கொள்வதில்லை. மேலும், மத்திய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் தடையின்றி நடைபெறுவதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT