சென்னை: சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தை வரும் 2030-ம்ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில், அடுத்த ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
கடந்த மே 23-ம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற முதல்வரை அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். சிங்கப்பூரில் 24-ம் தேதி, பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை அவர் சந்தித்தார். பிறகு, முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, முதலீட்டுக்காக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்தாகின. குறிப்பாக, சிங்கப்பூரின் ஹ-பி இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் மின்னணு பாகங்கள் தயாரிப்புக்கான முதலீட்டில் கையெழுத்திட்டது. சிங்கப்பூர் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சட்ட அமைச்சர் சண்முகம் ஆகியோரை சந்தித்த முதல்வர், இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்து பேசினார்.
பின்னர், சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, மே 25-ம் தேதி ஜப்பானின் ஒசாகாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். 26-ம் தேதி ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான ‘ஜெட்ரோ’வுடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அத்துடன், ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 27-ம் தேதி ஒசாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர், அங்குள்ள பிரபல கோட்டையையும் சுற்றிப் பார்த்தார். 28-ம் தேதி புல்லட் ரயிலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
மே 29-ம் தேதி ரூ.818.90 கோடிமுதலீடு தொடர்பாக 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் ஓமரான் ஹெல்த்கேர் நிறுவனம் ரத்த அழுத்தமானிட்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.128 கோடிமுதலீட்டில் தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஜப்பானில் இருந்து தமிழகம் திரும்புகிறார். இரவு 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் முதல்வரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர். திமுக சார்பிலும் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.