கரூர்: கரூரில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நேற்று நடைபெற்றது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.
கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் மே 26-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அசோக்குமார் வீடு மற்றும் ராம் நகரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில், “கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜூன் 30 காலை 10.30 மணிக்கு அசோக்குமாரோ அல்லது அவரது பிரதிநிதியோ ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அசோக்குமாரின் ஆடிட்டர் சதீஷ்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி, அசோக்குமார் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் அலுவலகமாக பயன்படுத்தி வந்த கட்டிடத்தில் வருமான வரித்துறையினர் 6 பேர், சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்தினர். மேலும், இக்கட்டிடத்துக்கு எதிரேயுள்ள தனியார் வங்கியிலும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் சோதனை நடைபெற்ற ஆண்டாங்கோவில் ராம்விலாஸ் நூற்பாலையில் நேற்றும் சோதனை நடந்தது.
அசோக்குமார் அலுவலகத்தில் முன்பு பணியாற்றிய காளிப்பாளையத்தில் உள்ள பெரியசாமி வீட்டிலும், திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.ரகுநாதன் அலுவலகம் உள்ள கட்டிடத்தில் இயங்கி வரும் ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இந்த சோதனை சங்கர் ஆனந்தின் ஆடிட்டர் ஷோபனா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
19 பேர் கைது
வருமான வரித்துறை அலுவலர்களை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 2 மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 14 பேரை கரூர் நகர போலீஸாரும், 5 பேரை தாந்தோணிமலை போலீஸாரும் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று, கோவை மாவட்டத்தில் 5-வது நாளாக நேற்று செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.