சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு (முன்பு 118.9 கி.மீ. ஆகஇருந்தது) செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, 2.8 கி.மீ. தொலைவில் சேத்துப்பட்டிலிருந்து நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் பூமிக்கடியில் முடிந்து, அடுத்த கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இப்பாதையில் வரும் ஜூலையில் சுரங்கப்பாதை பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேத்துப்பட்டில் சுரங்கம் தோண்டும்இயந்திரத்தை பூமிக்கடியில் இறக்கி செயல்படுத்துவதற்காக, ஆரம்பக் கட்ட பணிகள் மற்றும்கட்டுமானப் பணிகளை முடித்துள்ளோம். சுரங்கப்பாதை பணிக்காக, சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பாகங்கள் வந்தபிறகு, பூமிக்கடியில் இறக்கி ஒருங் கிணைக்கும் பணி தொடங்கும். இதன்பிறகு, ஜூலையில் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.