ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
சேத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்தி சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேத்தூர் பேரூராட்சியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பியுமான லிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
அவர் பேசுகையில், ''விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பகுதிகளிலும் ஆண்கள் பெண்களுக்கு தனித் தனியாக சுகாதார வளாகங்கள் அமைத்து, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும்'' என்றார். ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பகத்சிங், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் ஒன்றிய செயலாளர் பலவேசம், நகரச் செயலாளர் மூர்த்தி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
திருத்தங்கல்: சிவகாசி அருகே திருத்தங்கல் அம்பேத்கர் சிலை முன் நகர செயலாளர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் சமுத்திரம், வட்டார செயலாளர் ஜீவா, நகர செயலாளர் இக்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.