சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக நாராயணசாமியை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர்.நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மருத்துவத் துறையில் 33 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட நாராயணசாமி 13 ஆண்டுகள் பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறைத் தலைவராக பணியாற்றி உள்ளார். மேலும், பல்வேறு அரசு திட்டங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
தற்போது அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்தார். கரோனா முதல் அலையில் கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு, அரசு கரோனா மருத்துவமனையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.