சென்னை: புரசைவாக்கம் - படவட்டம்மன் கோயில் தெருவில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க 9 மாதங்களாக சென்னை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பல பள்ளிகளில் மோசமான பள்ளிக் கட்டிடங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. குறிப்பாக சென்னையில் பல்வேறு பள்ளிகளில் மோசமான பள்ளிக் கட்டிடங்கள் உள்ளன.
ஆனால், மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க சென்னை மாநகராட்சி எடுக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை கூறப்படுகிறது. இதற்கு எடுத்துகாட்டுதான் அமைச்சர் சேகர்பாபு வீட்டுக்கு அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் படவட்டம்மன் கோயில் தெரு பள்ளிக் கட்டிடம். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை உயர் நிலைப் பள்ளி ஓட்டேரி, கொசப்பேட்டை, படவட்டம்மன் கோயில் தெருவில் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் ஒரு கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. ஜன்னலில் கதவு ஒன்று பாதி சேதமடைந்து கிழே விழும் நிலையில் உள்ளது. 2 ஜன்னல்களை சுற்றியுள்ள பகுதி பகுதிகளில் மிகவும் சேதம் அடைந்துள்ளன. ஆனால், பல மாதங்களாக இதை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "பல மாதங்களாக இந்தப் பள்ளிக் கட்டிடம் இந்த நிலையில்தான் உள்ளது. அடிக்கடி இந்தக் கட்டிடம் தொடர்பாக செய்திகளில் வெளியாகும். அதில் இந்த சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுவார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இப்போதாவது சென்னை மாநகராட்சி இந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினர்.