சென்னை: தமிழர் நலனும், தமிழகத்தின் மேன்மையும்தான் எங்களுக்கு முக்கியம் என்று சிங்கப்பூரில் பேட்டியளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். அதற்கான வரைவுத் திட்டத்தை தயாரிக்க ‘போஸ்டன் கன்சல்டிங் குரூப்’ என்ற நிறுவனத்தை பணியில் அமர்த்தியுள்ளோம்.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட தமிழகத்துக்கு மேலும் ரூ.23 லட்சம் கோடி முதலீடு தேவை. இதன் மூலம் 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதும், தமிழர்கள் அதிகம் வாழும் நாடு என்பதாலும் சிங்கப்பூர் நெருக்கமான நாடாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.4,800 கோடி முதலீட்டில், 4 சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழகஅரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன் மூலம் 6,200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பல திட்டங்களுக்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்னும் கூடுதல் பங்காற்றுமாறு கேட்டுக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன்.
உலகில் தமிழர்களுக்கு எந்தபாதிப்பு ஏற்பட்டாலும், உடனடியாக உதவிக்கரம் நீட்டுவோம். அண்மையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, தமிழகம் கைகொடுத்தது. உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்தோம். வெளிநாடு வாழ் நல வாரியம், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
நான் முதல்வராகப் பதவியேற்றபோது, தமிழகத்துக்கு ரூ.5 லட்சம்கோடி கடன் இருந்தது. கரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைப்பாதுகாக்கும் கடமையும் இருந்தது. இவற்றை எதிர்கொண்டு, தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்சவாலானப் பணியை மேற்கொண்டோம்.
நிதிப் பற்றாக்குறை ஓரளவுக்கு சரியாகியுள்ளது. புதியநிறுவனங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. எனினும், இவற்றை சவால்களாக கருதவில்லை. பொது வாழ்வில், அரசு நிர்வாகத்தில் இவற்றை எதிர்கொண்டுதான் தீர வேண்டும்.
தமிழகம் வளர்ந்த, வளம்மிக்க மாநிலமாக இருப்பதால், வேலைக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இது நன்மையே தவிர, தீமை அல்ல. மற்றவர்கள் வேலைவாய்ப்பை அவர்கள் பறித்துக் கொள்கிறார்கள் என்று கூற முடியாது.
எங்களுக்கு தமிழர் நலனும், தமிழகத்தின் மேன்மையும்தான் முக்கியம். அதில் எப்போதும் உறுதியாக இருப்போம். தமிழ் மொழி கட்டாயம்; தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் 15-வது நிதிஆணையத்தின் வழிகாட்டுதல்படிதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பெரு நகரங்களுடன் ஒப்பிடும்போது, வரி குறைவாகவே உள்ளது.
அதிமுக 4 அணிகளாகப் பிரிந்திருப்பது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் அவர்களின் பலவீனத்தில் அரசியல் செய்யவில்லை. எங்கள் கொள்கைகள், தொண்டர் பலத்தை நம்பித்தான் இருக்கிறோம். பாஜகவுடன் திமுக கூட்டுசேர வாய்ப்பு இல்லை. அமைச்சராக உள்ள எனது மகன் உதயநிதியின் செயல்பாடுகள், பெருமைப்படத் தக்க வகையில் உள்ளன. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.