மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத குழந்தைகள் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, கடச்சனேந்தல் பொம்மி நகரில் செயல்பட்டு வந்த ஆர்.கே. டிரஸ்ட்டுக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் எல்.கே.டி. நகரில் செயல்பட்டு வந்த சைல்டு டிரஸ்ட் என்ற காப்பகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரே ஆஸ்பெஸ்டாஸ் அறைக்குள் 30 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்தக் காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே கடச்சனேந்தலில் சீல் வைத்த குழந்தைகள் காப்பகத்தை ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி நடத்திவந்தார். தற்போது சீல் வைக்கப்பட்ட காப்பகத்தை, அவரது இன்னொரு மனைவி பாண்டிச்செல்வி நடத்தி வந்துள்ளார். இந்த இரு காப்பகங்களிலும் நிறைய குறைகள் இருந்தது பற்றி, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் நிவர்த்தி செய்து கொள்ளவில்லை. எனவே, சீல் வைத்துள்ளோம்.
கடந்த 2 மாதத்தில், மதுரை மாவட்டத்தில் 7 காப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. தற்போது 48 காப்பகங்கள் மட்டும் செயல்படுகின்றன”என்றனர்.