தமிழகம்

ஆன்லைன் அபராத நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஜூன் 6-ல் உண்ணாவிரதப் போராட்டம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் அபராத நடவடிக்கையைக் கைவிடுதல், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 6-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எஸ்.யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காலாவதியான சுங்கச்சாவடி: தமிழகத்தில் வாகன ஓட்டுநர்கள் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, லஞ்சம் கொடுக்க மறுக்கும் வாகன ஓட்டுநர்களை தண்டிக்கும் வகையில் ஆன்லைன் அபராத முறை கையாளப்படுகிறது. மேலும், காலாவதியான சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 4.50 லட்சம் கனரக வாகனங்கள் உள்ளன. இவற்றில் அதிக பாரம் ஏற்றுமாறு குவாரி உரிமையாளர்கள் நிர்பந்திக்கின்றனர். ஆனால், லாரி ஓட்டுநர், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் மட்டும்ரூ.450 கோடி லஞ்சம் வாங்கப்படுகிறது.

13 லட்சம் வாகனங்கள்: இதேபோல, சுமார் 13 லட்சம்பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் தகுதிச் சான்று பெற சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. அப்போது ஒளிரும் பட்டைக்கு முகவர் மூலம் ரூ.2 800 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் ரூ.4650 கோடி முறைகேடு நடக்கிறது. மேலும், பிற மாநிலத்துக்கு செல்வதற்கான உரிமம் உள்ளிட்ட பெரும்பாலான நடைமுறைகள் இணையவழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

அப்படி இருக்கும்போது, ஆங்காங்கே இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின் சோதனைச்சாவடிகள் தேவையற்றவை. லஞ்சம் பெறுவதற்காகவே இவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல, மணல் கடத்தலும் பெரிய பிரச்சினையாக உள்ளது.

இவற்றுக்கு எல்லாம் தீர்வுகோரி, காவல், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தோம். எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், வரும் ஜூன் 6-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT