சென்னை: தமிழகத்தில் ஊழல், கள்ளச்சாராய இறப்புகள் தொடர்வதாக கூறி, அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் திமுகவின் 2ஆண்டுகால ஆட்சியில் ஊழல்,கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்துள்ளதாக கூறி சென்னையில் கடந்த 22-ம் தேதி அதிமுக சார்பில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கட்சி தலைமை நிர்வாகிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மேலும், மாநிலத்தின் சட்டம்ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்குலைந்துள்ளது. கள்ளச்சாராயத்தால் ஒரே வாரத்தில் 25 பேர்உயிரிழந்துள்ளனர். இதைக் கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கட்சி அடிப்படையிலான அனைத்துமாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பழனிசாமிஅறிவித்திருந்தார். அதன்படி இன்று மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பழனிசாமி பங்கேற்கிறார். சென்னையில் ஏற்கெனவே பேரணி நடத்தி, ஆளுநரிடம் மனுஅளித்திருப்பதால், சென்னை மாவட்டத்தில் எங்கும் ஆர்ப்பாட்டம் இல்லை என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.