புதுச்சேரி: புதுச்சேரி சண்டே மார்க்கெட் கடைகளில் தனியார் மூலம் அதிகமாக அடிக்காசு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி காந்தி வீதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வியாபாரம் செய்துவருகின்றனர். தற்போது அஜந்தாசிக்னல் முதல் புஸ்சி வீதி சின்னமணிக்கூண்டு வரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு கடைகள் போடப்படுகிறது. இந்த கடைகளில் புதுச்சேரி மட்டுமின்றி அருகில் உள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
இதனிடையே கடந்த காலங் களில் சண்டே மார்க்கெட்டில் புதுச்சேரி நகராட்சி மூலம் அடிக்காசு வசூலிக்கப்பட்டு வந்தது.கரோனாவுக்கு பிறகு புதுச்சேரிநகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் களில் உள்ள கடைகளில் அடிக்காசு வசூலிப்பதற்கும், பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கும் ஆண்டுதோறும் தனியாருக்கு டெண்டர் விடப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந் ததாரர் தரப்பில் நேற்று சண்டே மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அடிக்காசு வசூலித்தனர்.
அப்போது, ஒரு சதுர மீட்ட ருக்கு ரூ.15 வீதம் கடைகளை அளவீடு செய்து அடிக்காசு வசூலித்தனர். இதனால் 10 சதுர மீட்டர் கொண்ட கடைகள் ரூ.150 செலுத்த வேண்டி இருந்தது. இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
"அதிகமாக அடிக்காசு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தங்களால் செலுத்த முடியாது. தனியாருக்கு டெண்டர் விடாமல் நகராட்சி மூலமே அடிக்காசு வசூலிக்க வேண்டும்" என வியாபாரிகள் வலியுறுத்தினர். இதனை நகராட்சி அதிகாரிகள் ஏற்கவில்லை. மாறாக, முறைப்படி டெண்டர் விட்டு அடிக்காசு வசூலிக் கப்படுகிறது. கட்டணத்தை செலுத் தாவிட்டால் கடைகள் நடத்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தனர். பின்னர் மற்ற கடைகளுக்கு சென்று அளவீடு செய்து அடிக்காசு வசூலித்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சண்டே மார்க்கெட்டில் 60 சதவீதம் பேர் முறையாக அடிக்காசு கட்ட ணத்தை செலுத்துகின்றனர்.
சிலர் சங்கம் வைத்து கொண்டு அடிக்காசு வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர் முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால், அடிக்காசு வசூலிப்பதை ஒழுங்குபடுத்தி தருமாறு நகராட்சிக்கு முதல்வர் உத்தர விட்டார்.
அதன்பேரில் நாங்கள் கடை களை அளவீடு செய்து அடிக்காசு வசூலித்து வருகிறோம். அடிக்காசு கட்டணம் செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.