கும்பகோணம்: புதிய நாடாளுமன்றத்திற்கு வீர சாவர்க்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற வீர சாவர்கர் பிறந்தநாள் விழாவில் அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்தியுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பிரிட்டிஷ் அரசால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருமான வீர சாவர்க்கரின் 140-வது பிறந்த தினம் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கும்பகோணம் வீர சைவ மடத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் மண்டல பொதுச் செயலாளர் இந்திரஜித், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், மாவட்டப் பொருளாளர் உமாமகேஸ்வரன், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவர் விஜயன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று, வீர சாவர்க்கரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு வீர சாவர்க்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.