ஆனைமலை அருகே விவசாய தோட்டத்து கிணற்றில் விழுந்த பசுமாட்டை கிரேன் மூலம் உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர். 
தமிழகம்

பொள்ளாச்சி அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்திலுள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில் ஒரு பசு மாடு எதிர்பாராதவிதமாக கால் தவறி அங்குள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. மாட்டின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதனை மீட்க முயன்றனர்.

மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதால் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் கணபதி தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாடு சினையாக இருந்ததால் மாட்டின் வயிற்றில் கயிறு கட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். விவசாய நிலத்தில் திறந்த வெளியில் உள்ள கிணற்றுக்கு சுற்றிலும் வேலி அமைக்க தோட்டத்து உரிமையாளருக்கு தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT