தமிழகம்

பலத்த இடி, மின்னலுடன் மழை: சேலத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக, அவ்வப்போது பெய்யும் கோடை மழை, வெயிலின் தாக்கத்தை தணிப்பதால், மக்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம், இடி, மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால், சேலம் புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, பச்சப்பட்டி, பெரமனூர் சாலை என நகரின் பெரும்பாலான பகுதிகளில், சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக, 5 ரோடு தொடங்கி, சாரதா கல்லூரி சாலை நெடுகிலும் மழை நீர் ஆங்காங்கே தேங்கி, பெருக்கெடுத்து ஓடியது. இதனால், இரு சக்கர வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதேபோல், மாவட்டத்தின் பல இடங்களிலும் பலத்த இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

சேலம் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மிமீ.,-ல்): சேலம் 31.4, தம்மம்பட்டி 25, கரியகோவில் 20, காடையாம்பட்டி 18, கெங்கவல்லி 15, ஆத்தூர் 12, ஏற்காடு 7.2, எடப்பாடி 6.4, வீரகனூர் 6, ஓமலூர் 4, ஆனைமடுவு 3 மிமீ., என மழை பதிவானது. இதனிடையே, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாநகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பின் கீழ் தளத்தில் நின்ற சிறுவன், மழையில் நனையாமல் இருக்க, சுவரை ஒட்டியபடி நின்ற போது, அங்கிருந்த மின்சாரப் பெட்டியில் இருந்து, மின்சாரம் தாக்கி, மயங்கி விழுந்தார்.

அச்சிறுவனை, உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேட்டூரைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகனான அச்சிறுவன் அகிலன் (14), 8-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக, சேலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

SCROLL FOR NEXT