தஞ்சாவூர்: கள்ளச்சாராயத்தை மக்கள் தேடிச் செல்லாமல் இருக்க, தமிழகத்தில்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மது விலக்கு குறித்து பேசுவார்கள். ஆனால், இப்போது அதுகுறித்து வாய் திறப்பதில்லை. டாஸ்மாக் மதுவின் விலை அதிகம் என்பதால், சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். எனவே, கள்ளச் சாராயத்தை மக்கள் தேடிச் செல்லாமல் இருக்க, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் விற்கப்படுவது போல, தமிழகத்திலும் கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடச் செல்லும்போது போலீஸாருக்குதகவல் சொல்லிவிட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுகூட ஒரு எஸ்.பி-க்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது. ராஜராஜசோழன் முடியாட்சி காலத்தில், குடியாட்சி நடத்தினார்.
ஆனால் தற்போது குடியாட்சியில் முடியாட்சி நடத்தி வருகிறார்கள். செங்கோல் கொடுப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை. இதனால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள், தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையை உள்ளே வைக்காமல் ஏன் வெளியேநிறுத்தி இருக்கிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.