தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெள்ளிக் கிழமை அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2 புதிய கட்டிடங்களுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கியதற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ம.திருமலை நன்றி தெரிவித்துள்ளார்.
“தமிழ்ப் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களுக்கு ரூ.15 கோடி வழங்கியதன் மூலம் தமிழ்ப் பல்கலைக்கழக பெருந்திட்ட வரைபடத்தின் நோக்கம் நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது, இப்பல்கலைக்கழகத்தின் 30 ஆண்டு கால கனவாகும்.
பல்கலைக்கழக நூலகத்தை மையமாகக் கொண்டு சுற்றிலும் ‘த, மி, ழ், நா, டு’ ஆகிய 5 எழுத்துகளின் வடிவில் கட்டிடங் கள் கட்டப்படவேண்டும் என்று பெருந்திட்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஒதுக்கியுள்ள இந்த நிதியின் மூலம் 50,000 சதுர அடி பரப்பளவுக்கு 2 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும்போது பல்கலைக் கழகத்தின் இடத்தேவைகள் முற்றிலும் நிறைவடைந்துவிடும்.
19,805 சதுர அடியில் கட்டப்படும் ‘த’ வடிவக் கட்டிடம் சிற்பக்கலை, கட்டிடக்கலை, இசைக்கலை, நாடகக் கலைத் துறைகள் அடங்கிய கலைப்புலத்தின் துறை களுக்கும், பொதுத் தேவைக்கும் பயன்படுத்தப்படும்.
30,018 சதுர அடியில் கட்டப்படும் ‘நா’ வடிவக் கட்டிடத்தில் சுவடிப் புலத்தின் கீழ் செயல்படும் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, நீரகழாய்வுத் துறை ஆகிய துறைகள் செயல்படும். இந்தத் துறைகளெல்லாம் தற்போது இடநெருக்கடியுடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இட நெருக்கடியைத் தீர்த்து, புதுப்பொலிவு பெறுவதற்காக ரூ.15 கோடியை வழங்கி அறிவிப்பு செய்ததற்காக பல்கலைக்கழக ஆட்சிக்குழு, பேரவை, ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவர்கள் சார்பிலும் துணைவேந்தர் என்ற முறையிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
1981-ல் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்துக்கு தற்போது வழங்கியுள்ள ரூ.15 கோடி நிதிதான் மிகப் பெரிய தொகை. இதற்காக முதல்வருக்கு நன்றி கூறுகிறேன்” என திருமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.