சென்னை: சென்னையில் மாணவர்கள் பள்ளிக்கு சிரமமின்றி சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகள் உட்பட 420 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகள் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை 10-க்கு மேற்பட்ட பள்ளிகளில் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில். "பள்ளிக்குச் செல்ல பாதுகாப்பான சாலைகள்" என்ற பெயரில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் காலை மற்றும் மாலையில் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளிகளுக்கு சென்று வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் தான் சேருகின்றனர். இதன் காரணமாக, அவர்களின் இருப்பிடத்தில் இருந்து பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் சென்று வர வேண்டும். இதற்கான திட்டங்களைத் தான் "பள்ளிக்கு செல்ல பாதுகாப்பான சாலைகள்" என்ற பெயரில் செயல்படுத்த உள்ளோம்.
முதல்கட்டமாக இது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி, போக்குவரத்து காவல் துறை, கும்டா ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் ஐடிடிபி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் நகர்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 26-ம் தேதி புல்லா அவின்யூ பள்ளியில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளுக்கு அருகில் ஜீப்ரா கிராசிங் உள்ளதா, நடைபாதை உள்ளதா உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் தற்காலிக நடைபாதை ஏற்படுத்தப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் இந்தப் பள்ளியில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து சிட்டிஸ் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளுக்கு முன்னூரிமை அளித்து பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மொ சாலைகள் திட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள சாலைகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்" என்று அவர்கள் கூறினர்.