சென்னை: தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை இடங்களுக்கான அங்கீகாரத்தை திரும்பப் பெற இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
3 மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் இயங்கி வருகின்றன. இந்த 38 அரசுக் கல்லூரிகளில் 5,225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 3 மருத்துவக் கல்லூரிகள் இளநிலை படிப்புகளுக்கான அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு கே.ஏ.பி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டு உள்ளன.
காரணம் என்ன? - பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் குறைபாடுகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் திருப்திகரமாக இல்லை போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இந்த 3 கல்லூரிகளுக்கு இளநிலை மருத்துவ வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக இந்தக் கல்லூரிகள் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 3 மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மருத்துவக் கல்லூரிகள் ஆகும்.
முதல் முறை: சிசிடிவி மற்றும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு குறைபாடு காரணமாக அங்கீகாரத்தை திரும்ப பெறும் வகையிலான நிகழ்வு நடைபெறுவது இதுதான் முதல் முறை என்று முன்னாள் மருத்துவ கல்வி துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், முறையான பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடுதான் ஒரு மருத்துவமனையில் எத்தனை மருத்துவர்கள் உள்ளனர் என்பதற்கு சான்று ஆகும். அது போன்று சிசிடிவி காட்சிகள்தான் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றதற்கு சான்று. இவை இரண்டும் முறையாக இல்லாத காரணத்தால் இந்த நிகழ்வுகள் நடந்து உள்ளதாக முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.
அரசு அறிவுறுத்தல்: இந்த 3 மருத்துவக் கல்லூரிகளிலும் உடனடியாக இந்த வசதிகளை சரிசெய்ய தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. உடனடியாக இவற்றை சரிசெய்து அது தொடர்பான ஆவணங்களை இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திற்கு சமர்பிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இது மிகவும் சிறிய பிரச்சினைதான் என்பதால், ஆவணங்களை சமர்பித்த பிறகு உடனடியாக அனுமதி கிடைத்துவிடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சரை சந்திக்க முடிவு: கல்லூரிகளின் அனுமதி தொடர்பாகவும், சுகாதாரத் துறையின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதன்படி வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் மத்திய அமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.