சென்னை: தமிழகத்தில் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2023-ஆம் ஆண்டு 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
அனைத்து இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்த இது ஒரு தளமாக விளங்கும். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் போது அனைவரும் கண்டது போல, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தமிழகம் மிக விமரிசையாக நடத்தி, தமிழ்ப் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் பறைசாற்றும்" என்று அதில் கூறியுள்ளார்.