தமிழகம்

பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்த விவரம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சேலம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

சேலம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தேர்தல் பிரமாண பத்திரத்தில், அவரது சொத்து விவரங்கள், வருமானம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாக எழுந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து சேலம் நீதிமன்றத்தில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த திமுக மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி. இவர், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது குற்றம்சாட்டி சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு ஆன்லைனில் புகார் மனு அனுப்பினார்.

அந்த மனுவில், 2021-ல் நடைபெற்ற தேர்தலின்போது எதிர்க்கட்சிதலைவர் பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது அசையா சொத்துகள், ஆண்டு வருமானம், கடன் விவரங்கள் உள்ளிட்டவற்றை, வேண்டுமென்றே தவறாக தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த மனுவை பரிசீலித்த சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நடுவர் கலைவாணி, புகார் மனு குறித்து சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரிக்கவும், போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், அது குறித்த அறிக்கையை மே 26-க்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, புகார் மனு மீது விசாரணை நடத்தி, பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 125 (ஏ) (i), 125 (ஏ) (ii), 125 (ஏ) (iii) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மே முதல் வாரத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், புகார் மனு மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஆகியவை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர்.

SCROLL FOR NEXT