விழுப்புரம்/செங்கல்பட்டு: மரக்காணம் விஷச் சாராய வழக்கில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணை முடிவுக்கு வந்து, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கடந்த 13-ம் தேதி மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்ததில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷச் சாராயம் குடித்த 8 பேரும் சிகிச்சை பல னின்றி இறந்தனர்.
இது தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் கொடுத்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு, இளையநம்பி, சென்னையில் இருந்து மெத்தனாலை கடத்தி வந்த வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட், வானூர் பெரம்பை பகுதியைச் சேர்ந்த பிரபு ஆகிய 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டதன் பேரில் கைதான 15 பேர் மீதும் மரக்காணம் மற்றும் சித்தாமூர் காவல்நிலையங்களில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி சிபிசிஐடி போலீஸார், மரக்காணத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன் பேரில் 3 நாட்கள் விசாரணைக்கு அனுமதி வழங்கப் பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில். கைதான 11 பேரில் ரவி, முத்து, ஆறுமுகம், குணசீலன், மண்ணாங்கட்டி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையிலடைத் தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று அமரன், இளையநம்பி, ராஜா என்கிற பர்கத்துல்லா,ஏழுமலை, ராபர்ட், பிரபு ஆகியோரை விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ( பொறுப்பு) அகிலா முன் ஆஜர்படுத்தினர். இவர்களில் அமரன் வருகிற ஜூன் 9-ம் தேதி வரையிலும், மற்றவர்களை வருகிற ஜூன் 1-ம் தேதி வரையிலும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப் பட்டு, அங்கு சிறையிலடைத்தனர்.
சாராய ஊறல் சிக்கியது: இதற்கிடையே இந்த விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு பகுதியில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுராந்தகம், சித்தாமூர், சூனாம்பேடு மற்றும் கடலோர பகுதிகளான முதலியார் குப்பம், பனையூர், தாழுதாளி குப்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில், முதலியார்குப்பம் பகுதியில் முட்புதர்களில் சுமார் 105 லிட்டர் சாராய ஊறல் மற்றும் பேரல்கள் உள்ளிட்ட பொருட்களை இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
மேலும், உயிரிழப்புகள் ஏற்பட்ட கிராமப்பகுதிகள் மற்றும் செய்யூர், எல்லையம்மன் கோயில் உட்பட சுற்றுப்புற பகுதிகளிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரி வித்தன.