தமிழகம்

கோவை மாநகரில் 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன: டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்தார்

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்டதுபடி, கோவை மாநகரில் 3 புதிய சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள் என 4 புதிய காவல் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. டிஜிபி சைலேந்திரபாபு இக்காவல் நிலையங்களை திறந்து வைத்தார்.

கோவை மாநகரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து. கோவையில் காவல் துறையினரின் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசு சார்பில் கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனு அறிவிக்கப்பட்டன. அதன்படி, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் நிலையங்களுக்கு காவலர்களின் எண்ணிக்கை, அதன் எல்லை விவரங்கள் அரசால் வரையறுத்து வெளியிடப்பட்டது.

மூன்று காவல் நிலையங்களுக்கும் தலா ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமைக்காவலர்கள், 26 காவலர்கள் என தலா 31 பேர் கொண்ட பணியிடம் ஒதுக்கப்பட்டு நிரப்பப்பட்டன. அதேபோல், போத்தனூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய 4 காவல் நிலையங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, சட்டம் - ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு இன்று (மே 26-ம் தேதி) திறந்து வைத்தார்.

கோப்புகளில் எழுதி, காவல் நிலையங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் 1,352 காவல் நிலையங்கள் இருந்தன. அதில் 202 மகளிர் காவல் நிலையங்கள் மட்டுமே இருந்தது. முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது 1,574 காவல் நிலையங்கள் உள்ளன. கோவை மாநகரில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்பவத்தையடுத்து, கோவை மாநகர காவல்துறையை விரிவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல்துறையுடன் இணைய உள்ளது.

இதனால் கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில் 20 காவல் நிலையங்களாக அதிகரித்துள்ளது. இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இக்குற்றங்களில் ஈடுபடுவோர் உள்ளூர் அல்லது இந்தியாவுக்குள் உள்ளவர்களாக இருந்தால் எளிதாக பிடித்து விடலாம். ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருந்தால் பிடிப்பது சிரமமாக உள்ளது. காவல்துறை சார்பில் மக்களுக்காக காவல் உதவி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும். ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை.

இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும். கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்து விட்டார். மேலும் 130 ஆய்வாளர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து 1,030 உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், துணை ஆணையர்கள் சந்தீஷ், சண்முகம், மதிவாணன், சுகாஷினி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT