சென்னை: ஹிஜாப் அணிந்த மருத்துவரை பாஜக நிர்வாகி மிரட்டிய சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கையின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து தயார் செய்யும் நிலையம் மற்றும் பண்டக சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து 43 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "2010-ம் ஆண்டு வரை மான் கொம்புகள் மருந்துக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவிடமிருந்து கிடைத்து வந்தது. ஆனால், மத்திய அரசின் புதிய விதிகள்படி, இது நிறுத்தப்பட்டுள்ளது.
மகப்பேறு நேரத்தில் மானின் கொம்புகள் தானாக உதிர்ந்து விழும். அப்படி வீணாகி கீழே விழும் கொம்புகளை இம்ப்காப்ஸ்-க்கு வழங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சித்த மருத்துவமனைக்கு என்று தனியாக சித்தா எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.
நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த முஸ்லிம் பெண் மருத்துவரை ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்துக்காக பாஜக நிர்வாகி மிரட்டிய சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மாவட்ட மருத்துவ அலுவலரிடம் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.