சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி 
தமிழகம்

“என் இல்லத்தில் ஐ.டி ரெய்டு நடக்கவில்லை; சோதனையை எதிர்கொள்வது புதிதல்ல” - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: "வருமான வரித் துறையின் சோதனை எத்தனை இடங்களில் நடந்தாலும், அவர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்க தயாராகத்தான் இருக்கின்றோம். எத்தனை நாட்கள் இந்த சோதனையை நடத்தினாலும், முழு ஒத்துழைப்பு வழங்கவும், அதை எதிர்கொள்ளவும் என்னுடைய சகோதரர்கள், உறவினர்கள் என அனைவருமே தயாராகத்தான் இருக்கின்றனர்" என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பபோது அவர் கூறியது: "வருமான வரித் துறை சோதனை எனது சகோதரர் இல்லம், உறவினர்கள், நண்பர்கள் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களின் இல்லங்கள் என பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சில தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் சமூகவலைதளப் பக்கத்திலும் வெளியிட்டதைப் போல எனது இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை சோதனை நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

இன்று நடைபெற்ற சோதனை குறித்து, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மிகத் தெளிவான விளக்கத்தினை அளித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நேரத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து, அது எதனால் ஏற்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் ஆர்.எஸ்.பாரதி தந்திருக்கிறார்.

எனவே, இந்த சோதனை என்பது புதிதாக நான் எதிர்கொள்வது அல்ல. ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலின் இறுதிப் பிரச்சாரத்துக்கு முன்பாக, இதுபோன்ற வருமான வரித் துறையின் சோதனையை எதிர்கொண்டோம். தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிய நேரத்தில் அவசியம் நேரில் வரவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள், கட்டாயப்படுத்தினார்கள். அப்போதுகூட சொன்னேன், சோதனை என்ற பெயரில் எங்களை அழைத்து, இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும்.

எனவே, தேர்தல் முடிந்தபிறகு என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள், வீடுகளுக்கு சீல் வைத்தாலும்கூட பரவாயில்லை. அல்லது எனது பெற்றோருக்கு முன்பாக சோதனை நடத்தி, அங்கிருந்து என்ன கைப்பற்றுகிறீர்களோ, அவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு சோதனையை நிறைவு செய்யுங்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு, அதற்கான விளக்கத்தை அளிப்பதாக கூறியிருந்தேன்.

வருமான வரித் துறை சோதனை என்பது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் நடைபெற்றது. இந்த சோதனையில் என்னவொரு சிறப்பு என்றால், இன்று வருமான வரித் துறை சோதனை நடத்தும் பெரும்பாலான இடங்களில் இருப்பவர்கள் முறையாக வருமான வரி செலுத்தக்கூடியவர்கள்.

குறிப்பாக, அந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தபிறகு உடனடியாக நான் கரூருக்கு தொடர்பு கொண்டு கட்சியின் நிர்வாகிகள் யாரும் சோதனை நடைபெறும் இடங்களில் இருக்கக் கூடாது. சோதனையிட வந்தவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இவ்வாறு சொன்ன பிறகு, உடனடியாக அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். வருமான வரித் துறையின் சோதனை எத்தனை இடங்களில் நடந்தாலும், அவர்கள் கேட்கும் ஆவணங்களை வழங்க தயாராகத்தான் இருக்கின்றோம். எத்தனை நாட்கள் இந்த சோதனை நடத்தினாலும், முழு ஒத்துழைப்பை வழங்கவும், அதை எதிர்கொள்ளவும் என்னுடைய சகோதரர்கள், உறவினர்கள் என அனைவருமே தயாராகத்தான் இருக்கின்றனர்.

இந்த சோதனை முழுவதும் நிறைவுபெற்ற பிறகு, என்னென்ன சோதனை நடைபெற்றுது, என்னென்ன கருத்துகளை அவர்கள் கூறினார்கள் என்பதை முழுவதுமாக அறிந்து பின்னர் நான் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. | விரிவாக வாசிக்க > சோதனைக்கு வந்த வருமானவரித் துறை அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதம், தள்ளுமுள்ளு: கரூரில் பரபரப்பு

SCROLL FOR NEXT