சிவகங்கை: சிவகங்கையில் உள்ள ஊருணிக்கு கரையே இல்லாதபோது, அதில் பேவர்பிளாக் கற்கள் பதிக்க ரூ.25 லட்சத்துக்கு நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தம் விட்ட சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சிவகங்கை ஆவரங்காடு பகுதியில் பழமையான லட்சுமி தீர்த்த ஊருணி உள்ளது. இந்த ஊருணி சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முயற்சியால் தூர்வாரப்பட்டது. ஆனால் இந்த ஊருணியை சுற்றிலும் கட்டிடங்கள் இருந்ததால், கரை அமைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் இந்த ஊருணி கரையில் பேவர்பிளாக் கற்கள் பதிக்க நகராட்சி சார்பில் ரூ.25 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இதை ஒப்பந்தம் எடுத்த கந்தசாமி ஊருணியைப் பார்வையிட்டபோது கரை இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து 6 மாதங்களாகியும் பணியை மேற்கொள்ளவில்லை.
இது குறித்து ஒப்பந்ததாரர் கந்தசாமி கூறியதாவது: ஊருணியைச் சுற்றிலும் வீடுகள் தான் உள்ளன. கரை இல்லை. இதனால் கரையை யாரேனும் ஆக்கிரமித்துள்ளார்களா என்று வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்புகள் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.
இதனால் நகராட்சி அதிகாரிகளிடம் கரை அமைத்துக் கொடுத்தால் கற்கள் பதிப்பதாகவும், இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறும் கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் (பொ) பாண்டீஸ்வரி கூறுகையில், குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு கரை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.
ஊருணிக்கு கரையே இல்லாதபோது, அதில் பேவர்பிளாக் கற்கள் பதிக்க எப்படி அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விட்டனர் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.