தமிழகம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் வார்டில் படுக்கைகள் பற்றாக்குறை: தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகள்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக, நோயாளிகள் வளாகத்தில் தரையில் அமர்ந்து சிகிச்சை பெறும் பரிதாப நிலை நீடிக்கிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்று நோயாளிகளுக்கு முக்கிய சிகிச்சை மையமாகத் திகழ்கிறது. மருத்துவமனையின் தரைத் தளத்தில் 90-வது வார்டில் வெளி நோயாளிகளுக்கான புற்று நோய் சிகிச்சைப் பிரிவும், முதல் தளத்தில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவும் செயல்படுகின்றன.

இந்நிலையில், ஆண்டுதோறும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதற்கேற்றவாறு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காததால், நோயாளிகள் வளாகத்தில் அமர்ந்து சிகிச்சை பெறும் பரிதாபத்துக்குரிய நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

இதுகுறித்து மதுரை சுகாதாரச் செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி கூறியதாவது: இப்பிரிவில், சுமார் 35 படுக்கைகள் மட்டுமே உள்ளன. பெண்கள் மற்றும் ஆண்களுக்கான உள்நோயாளிகள் பிரிவுகள் மிக அருகிலேயே உள்ளன. தினமும் 40 முதல் 50 உள்நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் 60-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது, படுக்கைகள் கிடைக்காமல் தரையில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறைகள் சிறிய அளவில் உள்ளன. நோயாளிகளுடன் வருபவர்கள் உடனிருப்பதால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், வார்டில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. பல ஆண்டுகளாகவே இந்த வார்டில் இம்மாதிரியான நிலை தொடர்கிறது. இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

உயிருக்கு ஆபத்தான நிலை யில் வரும் நோயாளிகளுக்கு குறைந்தபட்சம் படுக்கை வசதிகூட அளிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பிரசவ வார்டு கட்டிடம் போல், புற்று நோய் உள்நோயாளிகளுக்கென பிரத்யேகமாக தனிக்கட்டிடம் அமைக்க வேண்டும். குறைந்த பட்சம் 100 படுக்கைகளை அதி கரிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT