தமிழகம்

தமிழக வடமாவட்டங்களில் பால் கொள்முதல் செய்ய ‘அமுல்’ நிறுவனம் திட்டம் - விவசாயிகளுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பால் கொள்முதலைத் தொடங்க அமுல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமுலுக்கு பால் வழங்க தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து தினசரி சராசரியாக 30 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து, பதப்படுத்தி மக்களுக்கு ஆவின் நிறுவனம் விநியோகம் செய்கிறது.

தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவு என்பதால், பொதுமக்கள் ஆவின் பாலை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பால் நிறுவனமான அமுல் நிறுவனம், தமிழகத்தில் பால் கொள்முதலைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என வட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அமுலுக்கு பாலை வழங்கலாம் என்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு, கூட்டுறவு அமைப்பு மூலம் பால் கொள்முதலை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

தினசரி 30 ஆயிரம் லிட்டர்: காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தினசரி 30 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.35-ம், எருமை பாலுக்கு ரூ.44-ம் வழங்கும் நிலையில், இதைவிட கூடுதல் விலை கொடுக்க அமுல் நிறுவனம் தயாராகி வருகிறது. இதனால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் வெகுவாக குறையும் நிலை உருவாகி உள்ளது.

அமுல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே பால் கொள்முதலை ஆரம்பிக்க முயற்சி எடுத்தது. அப்போது அந்த முயற்சி கைகூடவில்லை. தற்போது அமுல் இரண்டாவது முயற்சியை எடுத்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் பால் கொள்முதல் குறித்து இங்குள்ள அமுல் அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் முகமது அலி கூறும்போது, ‘‘அமுல் நிறுவனம் இதுவரை பால் கொள்முதலை தொடங்கவில்லை. தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ஆவின் நிறுவனத்தை அழிக்கும் இந்த முயற்சியை கண்டிக்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT