ராஜ்பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, செங்கோல் தொடர்பாக `இந்து தமிழ் திசை' நாளிதழில் வந்த செய்தி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டுத் தெரிவித்தார்.
அப்போது அவர் குறிப்பிடும்போது, ‘‘இன்று அவர்கள் நன்றாக, முழுமையாக எழுதியுள்ளனர். `தமிழ் இந்து' சிறப்பாக எழுதியுள்ளது’’ என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “அரசியல் சார்பற்றவரான குடியரசுத் தலைவர் இருக்கும்போது, நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் திறக்க காரணம் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ‘‘சத்தீஸ்கரில் புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாதான் திறந்து வைத்தார். நீங்கள் கூறியபடி பார்த்தால், ஆளுநர் தானே திறந்திருக்க வேண்டும்?’’ என்றார்.
தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘தெலங்கானாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட சட்டப்பேரவைக் கட்டிடத்தை அம்மாநில முதல்வர்தான் திறந்துவைத்தார். ஆளுநருக்கு அழைப்புகூட விடுக்கப்படவில்லை. அரசியல் சார்பில்லாதவர்கள் என்று குடியரசுத் தலைவரைக் கூறும்போது, ஏன் ஆளுநர்களைக் கூறுவதில்லை? ஆளுநர்கள் அரசியல் சார்பில்லாமல் நடுநிலை வகிக்கிறோம் என்றால், யாரும் ஒப்புக்கொள்வதில்லை. இந்தப் பார்வையில் முரண்பாடு உள்ளது’’ என்றார்.