திண்டுக்கல்: பழநி முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக தங்க செயினை போட்ட கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு, புதிதாக தங்க செயினை அறங்காவலர் தலைவர் சந்திரமோகன் வாங்கிக் கொடுத்தார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில், 2022 செப்.19-ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் கிழக்கு பகவதிபடி பகுதியைச் சேர்ந்த சசிதரன் பிள்ளை மகள் சங்கீதா என்பவர் சுவாமி தரிசனம் செய்ய பழநிக்கு வந்துள்ளார். அவர் கோயில் உண்டியலில் துளசி மாலையை செலுத்த முயன்றபோது, தவறுதலாக ஒன்றே முக்கால் பவுன் தங்க செயின் உண்டியலில் விழுந்துள்ளது.
இதையடுத்து, ‘எங்கள் குடும்பத்தின் ஏழ்மையை கருத்தில் கொண்டு உண்டியலில் விழுந்த தங்க செயினை திரும்ப வழங்கு வேண்டும்’ என்று கோயில் அலுவலகத்தில் சங்கீதா கடிதம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மேற்கண்ட சம்பவம் நடந்தது உறுதியானது.
ஆனால், சட்டப்படி உண்டியலில் விழுந்த பொருட்களை திரும்ப வழங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லை. இந்நிலையில், கோயில் அறங்காவலர் தலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராம் தங்க செயினை சங்கீதாவுக்கு வழங்க முடிவு செய்தார். அதன்படி, அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், கோயில் அலுவலர்கள் முன்னிலையில் சங்கீதாவுக்கு தங்க செயினை வழங்கினார். அதைப் பெற்றுக் கொணட சங்கீதா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.