தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (45). இவர், தனது மனைவி வேலுத்தாய் (35), மாமியார் உடையம்மாள் (60), மகன் மனோஜ் குமார் (22) ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, ஊருக்கு நேற்று மாலை திரும்பிக் கொண்டு இருந்தார். காரை மேல ஒப்பனையாபுரத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டினார்.
திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் பனவடலிசத்திரம் அருகே சென்றபோது, அந்த வழியாகச் சென்ற தனியார் பள்ளி வேன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது. காரில் சென்ற குருசாமி, வேலுத்தாய், உடையம்மாள், மனோஜ் குமார், கார் ஓட்டுநர் அய்யனார் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடல்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தனியார் பள்ளி வேனில் சென்ற 4 மாணவிகள் காயமடைந்தனர். தென்காசி ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, எம்எல்ஏ ராஜா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.