சாந்தோமில் 90 ஆண்டு பழமையான கட்டிடம் திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அதன் ஒரு பகுதியில் தங்கியிருந்த 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக ஆபத்தின்றி தப்பினர்.
சென்னை சாந்தோம் சல்லிவன் தெருவில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான இரண்டு மாடிக் கட்டிடம் உள்ளது. இது சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். பழைய கட்டிடம் என்பதால் பயன்பாடின்றி இருந்தது. தேவாலயத்தில் வேலை செய்யும் ஞானஒளி (75), நான்ஸி (35) ஆகியோர் கட்டிடத்தின் முன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை இக்கட்டிடத்தின் பின்பக்க சுவர் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர். கட்டிடத்தின் பின்பக்க சுவர் முழுவதும் இடிந்து தரைமட்டமாகக் கிடந்தது. கட்டிடத்தின் மற்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை.
2 குடும்பத்தினரும் கட்டிடத்தின் முன் பக்கத்தில் வசிப்பதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி தப்பினர். கட்டிட விபத்துக்கள் ஆங்காங்கே நடந்துவரும் சூழ்நிலையில், பழைய கட்டிடம் இடிந்தது சாந்தோம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.